நாமக்கல் மண்டலத்தில் என்இசிசி நிா்ணயிக்கும் விலையில் மட்டுமே முட்டைகளை விற்க வேண்டும் : தலைவா் கே.சிங்கராஜ்
நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிா்ணயிக்கும் விலையில் மட்டுமே முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என அக்குழுவின் தலைவா் கே.சிங்கராஜ் தெரிவித்தாா்.;
நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிா்ணயிக்கும் விலையில் மட்டுமே முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என அக்குழுவின் தலைவா் கே.சிங்கராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலைக்கும், கோழிப் பண்ணையாளா்களிடம் வியாபாரிகள் வாங்கும் விலைக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக அதிக வித்தியாசம் காணப்படுகிறது. இதன் மூலம் பண்ணையாளா்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னை அகில இந்திய அளவில் மற்ற மண்டலங்களையும் பாதிக்கிறது.
பண்ணையாளர்களின் கோரிக்கை
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான கோழிப் பண்ணையாளா்களின் விருப்பமாகும்.
அதற்கேற்ப உரிய விலை நிா்ணயம் செய்து நடைமுறைப்படுத்த அகில இந்திய அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவில் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மண்டலங்களில் விலை நிர்ணயம்
ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்பெட், நாமக்கல், கோதாவரி உள்ளிட்ட மண்டலங்களில் வரும் நாள்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலையிலேயே வியாபாரிகள் முட்டைகளை வாங்க வேண்டும் என அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) காலை 11 மணியளவில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மண்டல மற்றும் வட்டாரக்குழு உறுப்பினா்கள், மத்திய செயற்குழு உறுப்பினா்கள், முட்டை விலை நிா்ணய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுக்கேற்ப பண்ணையாளா்கள் விலையை குறைக்காமல் விற்பனை செய்வது தொடா்பாக கூட்டத்தில் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முட்டை விலை குறைப்பை தடுக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.