பெண் காவலா்கள் வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து
நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.;
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் பெண் காவலர்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் காவல் நிலையங்களில் பெண் போலீஸாருக்கு வளைகாப்பு செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ஜேடர்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏ.கதீஜாபேகம் என்பவருக்கும், ஆயுதப் படை இரண்டாம் நிலை பெண் காவலர் எம்.பிராா்த்தனாவுக்கும் வளைகாப்பு விழா நாமக்கல் ஆயுதப் படை காவலர் சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் இ.எஸ்.உமா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சண்முகம், தனராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பெண் காவலர்கள் அனைவரும் மண்டபத்துக்கு ஊர்வலமாக சீர்வரிசைகளை எடுத்துவந்தனர். ஆயுதப் படை காவலர்கள் நாகசுரம், தவில்களை வாசித்தனர்.
காவல் துறை உணவகம் மூலம் கிடைத்த லாபம், தனியார் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு, இசை வாத்தியங்கள் வாசிக்க சென்ன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வளைகாப்பு விழாவிற்கான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.