நாமக்கல்லில் முறைகேடு ஆம்புலன்ஸ்கள் பறிமுதல் - போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை!
நாமக்கலில் 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்,ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான முக்கிய சோதனை,7 வாகனங்கள் பறிமுதல்.;
நாமக்கல் மாவட்டத்தில் தகுதிச்சான்று இல்லாமலும், வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட ஏழு ஆம்புலன்ஸ் வாகனங்களை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்து, முறையான ஆவணங்களுடன் இயக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 டிசம்பர் 15 முதல் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி தலைமையிலான குழுவினர் மாநகராட்சிக்குட்பட்ட திருச்செங்கோடு சாலை, திருச்சி சாலை, மோகனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்படுவதும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இருப்பதும், வரி செலுத்தப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1.50 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதே சோதனையின் போது ஐந்து ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஜே.சி.பி. வாகனம் மற்றும் ஓன் போர்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முக்கிய சேவையில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.