ராசிபுரம் 6 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய 1,000 மருந்தகங்களில், ராசிபுரத்தில் 6 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு – 75% தள்ளுபடி விலையில் மருந்துகள்,;

Update: 2025-02-25 05:40 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆறு இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, அத்தனூர், ஆயிபாளையம், பிள்ளாநல்லூர் ஆகிய இடங்களில் இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 17 கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும், 10 தனிநபர் மருந்தகங்கள் மூலமாகவும் செயல்படவுள்ளதாக தெரிவித்தார். இந்த மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
 பொதுவாக ஏழை எளிய மக்கள், முதியோர்கள், நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்க ஒவ்வொரு முறையும் 500 முதல் 1,000 ரூபாய் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசின் புதிய முயற்சியான 'முதல்வர் மருந்தகங்கள்' மூலம் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் சேவை மனப்பான்மையுடன் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுவாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த மருந்தகங்கள் மூலம், முதியோர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயனடைவதோடு, அவர்களின் மருத்துவ செலவினங்களும் குறைந்து, பொருளாதார சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News