எம்ஜிஆர்- கலைஞர் பிரச்சாரம் எப்படி இருக்கும்?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை ஆறு மணிக்குத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி தடை செய்யப்பட்டு விட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை ஆறு மணிக்குத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி தடை செய்யப்பட்டு விட்டன.
கடைசி நேர பிரச்சாரமாக மு.க.ஸ்டாலின், பிரம்மாண்டமான கூட்டத்தில் இறுதிக்கட்ட வார்த்தை வீச்சுகளை நடத்தினார். எடப்பாடி பழனிச்சாமி பெருந்திரள் கூட்டத்தினர் இடையே பாமரத் தமிழில் பிரச்சாரம் செய்தார். இன்னொரு இடத்தில் சீமான் பிரச்சாரம் செய்தார். தனியார் தொலைக்காட்சிகள் இத்தகு நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து காட்டி, தமிழகத்தில் பரபரப்பை ஊட்டின. தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்த போது, எம்.ஜி.ஆர்., கலைஞரின் பிரச்சார நினைவுகள் நெஞ்சில் நிழலாடத் தொடங்கின.
தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்த காலம் அது. எதிர்க்கட்சித் தலைவராக கலைஞர் களமாடி வந்தார். அப்போதெல்லாம் எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் எம்ஜிஆர் தனது கடைசி கட்ட பிரச்சாரத்தை அண்ணாநகர் தொகுதியில் தான் வைத்துக் கொள்வார். ஏனென்றால் அங்கு தான் கலைஞர் தேர்தலில் போட்டியிட்டு வந்தார். அவரை எதிர்த்துக் கடைசி நேரக் களமாடலை நிகழ்த்த வேண்டும் என்பது எம்ஜியாரின் யுக்தி.
அதன்படி அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமைந்தகரை அருகே டிபி சத்திரம் பகுதியில் எம்ஜிஆர் தனது நிறைவுரையை நிகழ்த்தி முடிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். கலைஞரும் அதே போன்று தான் தனது உச்சகட்டப் பிரச்சார உரை வீச்சை அதே டிபி சத்திரம் பகுதியில் தான் நடத்தி முடித்து வந்தார்.
இதற்குக் காரணம் என்ன?
அந்தப் பகுதியில் தான் குறைந்த நிலப்பரப்பில் பெருந்திரளான வாக்காளர்கள் குவிந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களைக் குறி வைத்துத் தான் இரு பெரும் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரச் சூத்திரத்தைச் சுழன்றாட வைத்தனர். அப்போது தலைவர்களின் மத்தியில் வெற்றிச் சிந்தனை மட்டுமே குறியாக இருந்தது. இப்போதோ... வீழ்ச்சிக்கான சூழ்ச்சிகளுக்குத் தானே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, அருகருகே இரு தலைவர்கள், அவரவர்களுக்கான தொண்டர்களும், அனுதாபிகளும், வாக்காளர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர்.
ஆனாலும் கூட, இரு வேறு தலைவர்களுக்காகக் கூடிய மக்களிடையே எந்தவிதமான முரண்பாடோ சண்டையோ சச்சரவோ அதிரடி அடிதடியோ நடந்ததே கிடையாது. அப்போதெல்லாம் நான்கு மணிக்குப் பிரச்சாரம் முடிக்கப்பட்டு விடும். பிற்பகல் 3.55 மணி வரையிலும் கூட இரு தலைவர்களும் வீராவேசமாக பிரச்சாரம் நடத்துவார்கள். மிகச் சரியாக இரு நிமிடங்கள் இருக்கும் பொழுது, இரு தலைவர்களுமே பேச்சை முடித்தவர்களாக, மௌனத்தோடு கரம் கூப்பி வணங்கியவாறு செல்வர்.
எம்ஜிஆரோ கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு,இரு கரங்களையும் பொதுமக்களுக்குக் கொடுத்து கைகுலுக்கியவாறு சென்றிடுவார்.
இரு தலைவர்களின் முகங்களிலும் சரி...உடலிலும் சரி, பிரச்சாரப் பயண அலைச்சலால் உடல் இளைத்து, முகம் களைத்து, உடை கலைந்து...துவைத்துப் போட்ட துணி போல் அவர்கள் செல்வதை பார்க்க பரிதாபமாக இருக்கும்.