கபசுரக்குடிநீர் வழங்கி மே தின விழா
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மயிலாடுதுறையில் பேரணியை தவிர்த்து கபசுரக்குடிநீர் வழங்கி எளிமையாக தொழிலாளர் சங்கத்தினர். மே தின விழாவை கொண்டாடினர்.
மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீர பாண்டியன் தலைமையில் கடந்த 30 ஆண்டுகளாக பொது தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.
ஆண்டுதோறும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி இச்சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து பொது தொழிலாளர் சங்க அலுவலகம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பேரணி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா பரவலின் காரணமாக விதிக்கப்பட்ட அரசு கட்டுப்பாடுகள் காரணமாக மே தின விழா பேரணி ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் சங்க கொடியை ஏற்றிவைத்த பொது தொழிலாளர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். இதில் குறைந்த அளவிலான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.