விநாயகர் சதுர்த்தி விழா: தருமபுரம் ஆதீனம் 27-ஆவது மடாதிபதி பங்கேற்பு
மயிலாடுதுறை அரண்மனை நகரில் உள்ள மேதா ஸ்ரீகணபதி கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு
மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது மடாதிபதி பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறையில் வீடுகளிலும், கோயில்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை அரண்மனை நகரில் உள்ள மேதா ஸ்ரீகணபதி கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, விநாயகருக்கு மகா தீபாராதனை செய்து வழிபாடு மேற்கொண்டார்.
பின்னர், அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசுகையில், விநாயகப் பெருமானை வழிபட்டு தொடங்கும் அனைத்து காரியங்களும் நலமாக நடைபெறும். இப்பகுதி விவசாய பகுதி. விவசாயிகளுக்காக காவிரியைக் கொண்டு வந்தது விநாயகப் பெருமான் என்கிறது புராணம். விநாயகர் வழிபாடு செய்யாமல் எந்தகாரியத்தையும் தொடங்கக் கூடாது. சிவபெருமான் விநாயகரை வழிபடாமல் தேரில் ஏறியபோது தேரின் அச்சு முறிந்தது. அதனால்தான் அவ்வூர் அச்சுருபாக்கம் என்று அழைக்கப்பட்டது. முருகபெருமான் வள்ளி திருமணம் செய்யும்போது விநாயகர் உறுதுணையாக இருந்தார். விநாயகர் பெருமானை வழிபாடு செய்தால் எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கும். மகாபாரதத்தை தனது கொம்பினை வைத்துக் கொண்டு எழுதியவர் விநாயகர். எனவே, எந்த காரியத்தை செய்யும் முன்னரும் விநாயகரை வழிபட வேண்டும் என்று பேசினார்.