மயிலாடுதுறை அருகே சாலை செப்பனிடப்படாததால் பொதுமக்கள் மறியல் போராட்டம்
மயிலாடுதுறை அருகே சாலை செப்பனிடப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறை தாலுகா நல்லத்துக்குடி ஊராட்சி பெருமாள் கோயில் வடக்குத் தெருவில் சாலை செப்பனிடும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதையொட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர்.
தோண்டப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று மயிலாடுதுறை நல்லத்துக்குடி பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலையை செப்பனிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.