மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் அவதி
மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் நாள்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு 4ம் நம்பர் புதுத்தெருவில் ஆள்நுழைவு தொட்டியிலிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடந்து செல்ல முடியாது வாகனத்தில் சென்றால் தான் சாக்கடையை மிதிக்காமல் வீட்டிற்கு செல்ல முடியும். அதிக அளவில் தேங்கியுள்ள சாக்கடை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கடுமையாக துர்நாற்றம் வீசுவதால் வாந்திபேதி ஏற்படுவதாகவும் காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக கூறும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அருகாமையில் உள்ள 32வது வார்டடில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியிலிருந்து சாக்கடை நீர் வழிந்தோடி மழைநீர் வடிகாலில் கலந்து ஓடுகிறது. இதேபோல் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் வீதிகளில் குளம்போல் தேங்கி தொற்று நோய் பரவி வருகிறது.
ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தற்காலிக நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.தமிழக அரசு மயிலாடுதுறை நகராட்சியில் வாழும் பொதுமக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாத்திட பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மயிலாடுதுறை நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.