தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவர்களை ரப்பர் படகு மூலம் காப்பாற்றுவது குறித்து பயிற்சி ஒத்திகை
காவல்துறை டிஜிபி உத்தரவிட்டதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் கடற்கரையோர மாவட்டமான மயிலாடுதுறை அதிக புயல் வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகிறது, புயல் வெள்ள காலங்களில் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் மக்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து பேரிடர் மீட்புக் குழுவினர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுடன் இணைந்து உள்ளூர் காவல் துறையினர் பணியாற்றுவர்.
இந்நிலையில் காவல்துறை டிஜிபி, உள்ளூர் காவல் துறையினருக்கு இது குறித்து போதிய பயிற்சி அளிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பெண் காவலர்கள் உட்பட 60 பேருக்கு 5 நாள் பயிற்சி முகாம் கடந்த 2ஆம் தேதி துவங்கியது. செயல்முறை மற்றும் கற்பித்தல் வழியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கமாண்டோ படை காவல்துறையினர் 4 பேர் பங்கேற்று பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
இன்று மயிலாடுதுறை ஆழ்வார்குளத்தில் அதிநவீன மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகு மூலம், தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவர்களை கயிறு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு காப்பாற்றுவது குறித்து நேரடி பயிற்சி ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.