திருக்கடையூர் சித்திரை தேர் திருவிழா: திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருக்கடையூரில் இன்று நடைபெற்ற சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-14 15:50 GMT

திருக்கடையூர் கோவில் தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டுஅபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க, அதிர்வேட்டுகள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்த போது ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தேர் திருவிழாவை தொடர்ந்து 16ஆம் தேதி தீர்த்தவாரியும் 18ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News