மயிலாடுதுறை: முத்தூர் பிடாரி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே முத்தூர் பிடாரி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே முத்தூர் கிராமத்தில், பழமைவாய்ந்த ஸ்ரீபிடாரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 7-ஆம் தேதி அனுக்ஜை, விக்கேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, 3 கால பூஜைகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக தினமான இன்று காலை நடைபெற்ற 4-ஆம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோயிலைச் சுற்றிவந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முருகன், காமேஸ்வரர், பாம்பிலி அம்மன், காளியம்மன், பொறையான், வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.