சுருக்கு மடி- இரட்டைமடி வலைகளை அனுமதிக்கமாட்டோம்: 6 மாவட்ட மீனவர்கள் தீர்மானம்
கூட்டத்தில், சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டுமென மீனவ கிராம நிர்வாகிகள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்
சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தரங்கம்பாடியில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில், மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பிரதிநிதிகள் தலைமையில், நாகை அக்கறைபேட்டை கிராம நிர்வாகிகள் முன்னிலையில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி, மீனவ கிராம நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சுருக்கு மடி வலை மற்றும் இரட்டை மடி வலை, அதிவேக என்ஜின்களை பயன் படுத்தி மீன் பிடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த தீர்மானத்தின் அசல் கடிதத்துடன், ஒவ்வொரு மீனவ கிராமங்களின் லெட்டர் பேடுகளில் தீர்மானத்தை எழுதி , தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சென்னை சென்று சந்தித்து, மனு அளிப்பது எனவும், இதைத்தொடர்ந்து, நாகையில் மாநில அளவிலான சுருக்குமடி வலைக்கு எதிரான கிராம நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது . இந்த கூட்டத்தை முன்னிட்டு, கூடுதல் காவல்கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், 400 -க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.