செங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, செங்குடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார், சப்தகன்னி அம்மன், காளியம்மன், வீரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தனித்தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை முடிவடைந்ததை அடுத்து, பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர். அதனை அடுத்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீமத் வாயு சித்த ராமானுஜ தாச ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில், பாஜக மயிலாடுதுறை நகர தலைவர் கண்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.