இருசக்கர வாகனத்தில் சென்ற காதலர்களை தாக்கி பாலியல் தொல்லை
இருசக்கர வாகனத்தில் சென்ற காதலர்களை தாக்கி பாலியல் தொந்தரவு செய்த 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.;
மயிலாடுதுறை திருவாரூர் சாலை கேணிக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் ஐஸ்வர்யா (வயது 21). இவர் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி உதயசூரியன் தெருவைச் சேர்ந்த இளஞ்செழியன் மகன் குபேந்திரன் (23). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 20-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் குபேந்திரன, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் மயிலாடுதுறையிலிருந்து முளப்பாக்கம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர். முளப்பாக்கம் பழைய தரங்கம்பாடி ரயில்வே சாலை அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் 2 பேர் ஐஸ்வர்யாவையும், குபேந்திரனையும் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் குபேந்திரனை ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் ஐஸ்வர்யாவிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா கூச்சலிட மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் அதே மர்ம நபர்கள் 2 பேரும் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று, அவரது செல்போன் எண்ணை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்கள் மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜித்குமார் (24), செருதியூர் கீழத்தெருவை சேர்ந்த வைத்தியநாதன் மகன் பாலசுப்ரமணியன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அஜித்குமார், பாலசுப்ரமணியன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றதாக வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் 2 பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.