தடைசெய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 200 கிலோ மத்தி மீன்கள் பறிமுதல்
சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் தடைசெய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 200 கிலோ மத்தி மீன்கள் பறிமுதல் செய்து ஏலம் விடபட்டது.
சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் தடைசெய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 200 கிலோ மத்தி மீன்கள் பறிமுதல் செய்து ஏலம் விடபட்டது. மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக இதுவரை 255 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் திருமுல்லைவாசல்,மடவாமேடு, பூம்புகார் உள்ளிட்ட மூன்று இடங்களில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும். 1983ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து 5வது நாளாக மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர் கடலோர மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் தடைசெய்யப்பட்ட மற்றொரு வலையான 40 மி.மீ குறைவான அளவுடைய இழுவலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 200 கிலோ எடை கொண்ட மத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த நான்கு தினங்களாக மீன் வளத்துறை மற்றும் மீன்வள துறை அமலாக்கப் பிரிவு போலீசாரால் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியதாக 255 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று வானகிரியில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பறிமுதல் செய்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகாளே அரசின் சார்பாக அங்கேயே ஏலம் விட்டனர். இதனால் வானகிரி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.