சீர்காழி அருகே கோவில்பத்து பகுதியில் தீ விபத்து: 5 வீடுகள் சேதம்
சீர்காழி அருகே கோவில்பத்து பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புறவழிசாலை அருகே கோவில்பத்து பகுதியில் சாலையோரம் அடுத்தடுத்து 10 க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் அமைந்துள்ளன. இன்று காலை இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூவேந்தன் என்பவரது வீடு தீபற்றியது. காற்றின் வேகத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ மளமளவென்று பரவியது.
இதில், அருகில் இருந்த சுபேந்திரன், ரோஸ்லின், வள்ளிமயில், தனலட்சுமி ஆகிய 5 பேரின் குடிசை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. வீட்டில் இருந்த அனைவரும் உடனே வெளியேறியதால், உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த சீர்காழி தீயணைப்பு மீட்புப்படையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா என, சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.