மயிலாடுதுறை அருகே பாலப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர மூவலூர்-கோழிகுத்தி இடையே காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்;
மயிலாடுதுறை அருகே 3 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நிறைவடையாததால், மாணவர்களும், பொதுமக்களும் ஆபத்தான பயணம் மோற்கொள்ளும் நிலையை கருத்தில் கொண்டு காலம் கடத்தாமல் பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டுமென நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை வட்டம் மூவலூர் கிராமத்தில் இருந்து கோழிகுத்தி, மாப்படுகை, சோழம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இடையில் உள்ள காவிரி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்காக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் பழுதடைந்ததையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ரூ.3.5 கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்ற நிலையில் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படாததால் மிக அருகில் உள்ள மூவலூருக்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நீண்டதூரப் பயணத்தை தவிர்க்க 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாள்தோறும் காவிரி ஆற்றின் இடையே உள்ள சட்ரஸ் மேடை மீது ஏறி தங்கள் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்கு பயணம் செய்து வருகின்றனர். மேலும், முதியவர்கள், பெண்கள் பலர் அவசர தேவைகளுக்கு இந்த சட்ரஸ் மேடையை அச்சத்துடனேயே பயன்படுத்தி வருகின்றனர்.
பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதை சாதமாக்கிக் கொண்டு ஒருசிலர் காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விபத்தினை தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரவும் மூவலூர்-கோழிகுத்தி இடையிலான காவிரி ஆற்றுப்பாலத்தின் கட்டுமானப் பணியை இனியும் காலம் கடத்தாமல் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் (நபார்டு மற்றும் கிராமச்சாலைகள்) பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.