மயிலாடுதுறையில் சோழர் காலத்தைய ஐயாரப்பர் கோவில் திருத்தேரோட்டம்
மயிலாடுதுறையில் சோழர் காலத்தைய ஐயாரப்பர் கோவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.;
மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஐயாரப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குரியதாகும். திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று இங்கும் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தர்மசவர்த்தனி சமேத ஐயாரப்பர், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.