நெல்மூட்டைகள் ரயில்மூலம் அரவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 2 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை சாகுபடி நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலிருந்து உடனுக்குடன் அரவைக்கு அனுப்பிவைக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்து தற்பொது தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் 82 அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து, நெல்லை விரைவாக கொள்முதல் செய்வதற்காக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்கிற்கு எடுத்து செல்லும் பணிகளில், நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகளை சரக்கு ரயில் மூலம் அரவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது. 200 லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றி கிடங்கிற்கு எடுத்து செல்லாமல், நேரிடையாக மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயிலில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஏற்றினர். கொள்முதல் நிலையத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாக அரிசி அரவைக்கு அனுப்பி வைக்கப்படுவது, விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதே கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்