ஓ.என்.ஜி.சி. தளவாடப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம்
மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. தளவாடப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அஞ்சல்வார்த்தலை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. அதனை அறிந்த அப்பகுதி மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று அஞ்சல்வார்த்தலை கிராமத்தில் இருந்த ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை லாரியில் ஏற்றி மல்லியம் மஞ்சளாறு பகுதியில் செயல்பட்டு வந்த ஓ.என்.ஜி.சி. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு புதிய எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான முயற்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஈடுபட்டது.
இதனை அறிந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. துணை மேலாளர் அன்பரசு மற்றும் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் படி தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரி மீண்டும் அஞ்சல் வார்த்தலை கிராமத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.