மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் மீது நாம் தமிழர் கட்சி புகார்
மயிலாடுதுறையில் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் மீது நாம் தமிழர் கட்சியினர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தனர்.;
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தகுதியற்றவர் என்றும், ஆபாச வார்த்தைகளாலும் சமூக வலைதளங்களில் தனிமனித தாக்குதல் நடத்தி வருவதாக, அக்கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், மண்டல செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் இன்று புகார் மனு அளித்தனர்.
சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தது குறித்து ஏற்கெனவே இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கில் எதிர்தரப்பினர்மீது இன்னும் கடுமையான பிரிவுகளை சேர்த்து சட்ட நடவடிக்கைகள் எடுத்தும் தடுத்து நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்து தெரிவிக்கும் வகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தனது போக்கினை அவர்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.