குமாரமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் கதவணையை எம்எல்ஏ ராஜ்குமார் ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் குமாரமங்கலத்தில் 463 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதவணையை எம் எல் ஏ ராஜ்குமார் ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம்-ஆதனூர் இடையே ரூ.463.2468 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியில் காவிரி ஆற்றில் பிரியும் கொள்ளிடம் ஆறானது, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் குடிநீர் தேவைகளையும், சுமார் 22 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன தேவையையும் பூர்த்தி செய்கிறது.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி நீரை உபயோகப்படுத்தவும், கடல்நீர் உள்புகாமல் தவிர்க்கவும் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படும் என்று 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதற்கான பணிகள் 2019-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்மூலம், 1064 மீட்டர் நீளத்திற்கு 84 கண்வாய்களில் 10 அடி உயரம் இரும்பு பலகைகளை அமைத்து 0.334 டி.எம்.சி.தண்ணீரை தேக்கவும், 307 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடிநீரை செறிவூட்டவும் திட்டமிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கி 71 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போல் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால் கதவணை அடுத்துள்ள பக்கவாட்டுக் கரைகள் பாதிக்காமல் இருக்க, கான்கிரீட் தடுப்புச் சுவரின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கதவணை அமைக்கும் பணிகள் குறித்து தஞ்சை வெண்ணாறு கோட்ட வடிநில செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதலாக 50 கோடி ரூபாய் இதற்கு செலவாகும் என்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்கும்போது குமாரமங்கலம்-ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் புதிய கதவணையால் 22 ஆயிரம் ஏக்கருக்குமேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் இந்த கதவணை அருகே பூங்கா அமைத்து சுற்றுலாதலமாக மாற்றுவது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் நிதியை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.