மக்களைத் தேடி மருத்துவ திட்டம் : மயிலாடுதுறை ஆட்சியர் தொடக்கி வைப்பு
நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 'மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்; இன்று தொடக்கி வைத்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளும் நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கவும், வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, முக்கரும்பூர் ஊராட்சியில் முதல்கட்டமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.