மயிலாடுதுறை: நேரடிநெல் கொள்முதல் திறக்கக்கோரி விவசாயிகளின் சாலை மறியல்.
நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி அதன்மேல் அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
மயிலாடுதுறை அருகே அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி விவசாயிகளின் சாலை மறியல். போராட்டத்தால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 70 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லை கொள்முதல் செய்வதற்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 87 இடங்களில் மட்டுமே அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால், பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மங்கைநல்லூர் அடுத்த தத்தங்குடி கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தால், விவசாயிகள் சொந்த செலவில் தகரக் கொட்டகை அமைத்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகளுடன் பலநாட்களாக காத்திருந்தும், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து, மங்கைநல்லூர் கடைவீதியில், மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி அதன்மேல் அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், சாலை மறியலை கைவிட்டனர்.