மயிலாடுதுறை: சரக்கு வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தியவர் கைது
மயிலாடுதுறையில் சரக்கு வாகனத்தில் நூதன முறையில் காரைக்காலில் இருந்து 3000 மதுபாட்டில்களை கடத்திய நபரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் :-;
மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரகசியமாக மதுபானம் கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின்பேரில் எஸ்.ஐ இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு சின்னகடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை செய்துள்ளனர். பின்னர் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு பாண்டி மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. மேலும் காவல்துறையிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க நூதன முறையில் சரக்கு வாகனத்தில் மது பாட்டில்களை வாகனத்தின் உள்ளே தனி இடத்தில் மறைத்து வைத்து கடத்தியுள்ளான்.
இதனையடுத்து, வாகனத்தில் 60 பெட்டிகளில் இருந்த 3000 மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் இருக்கக் கூடும். மேலும் வாகனத்தை ஓட்டிவந்த சண்முகம் மற்றும் அவருடன் இருந்த கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.