மயிலாடுதுறை அருகே மழை விட்டும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை அருகே உள்ள கிராமங்களில் மழை விட்டு 5 நாட்களாகியும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை நேரத்தில் கடந்த 31ம் தேதி முதல் 2ம்தேதி காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மழை விட்ட பின்னர் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள மழை நீரை வடியவைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி கிராமத்தில் வயலில் சாய்ந்த சம்பா பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி 5 நாட்களுக்கு மேலாக தண்ணீரில் கிடப்பதால் 50 ஏக்கருக்குமேல் சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் வேதனையடைந்துளனர். தங்கள் பகுதியில் உள்ள பட்டவர்த்தி வாய்க்கால் 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும் பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகளுக்கு தொடர் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டும் விவசாயிகள் பட்டவர்த்தி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் கிராமத்தில் வேளாண்மைதுறையினர் உறிய முறையில் கணக்கீடு செய்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில் பட்டவர்த்தி வாய்க்கால் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிதிபெற்றவுடன் விரைவில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தனர்.