வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள தங்க கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் 5கிலோ தங்கம் கொண்டு கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம், தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு.;
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில், தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமி உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர்
இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் திருப்பணியை, தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைகழகம் மேற்கொண்டது. அப்பல்கலைக்கழகம் சார்பில் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதும் தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு, இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கி நடைபெற்றன. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம் வந்து, கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.