மக்களை தேடி இந்திய மருத்துவம் திட்டம்: மயிலாடுதுறை ஆட்சியர் தொடக்கம்
துளசி, கற்றாழை, ஆடாதொடை, தூதுவளை, நிலவேம்பு உள்ளிட்ட வகை மூலிகைச் செடிகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது
மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முதற்கட்டமாக 1000 மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை (சித்தா), சார்பில் சித்த மருத்துவத்தில் பயன் தரும் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று, மூலிகை செடிகளை பார்வையிட்டு அவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். முதற்கட்டமாக, துளசி, கற்றாழை, ஆடாதொடை, தூதுவளை, நிலவேம்பு உள்ளிட்ட வகைகளை சேர்ந்த ஆயிரம் மூலிகைச் செடிகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.