இதுவல்லவோ காதல்: மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் மரணம்
மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழந்தார். இறப்பிலும் பிரியாத தம்பதியினர் மறைவால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள் (88), மாரியம்மாள் (82) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதி, மகிழ்ச்சியாக மூத்த மகன் செழியன் பாதுகாப்பில், அவர்கள் வீட்டிலேயே இருந்து வந்தனர்.
இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரியம்மாள் நேற்றிரவு உயிரிழந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது இணையை பிரிந்த துக்கம் தாங்காமல், அவரது கணவர் கலியபெருமாள் அதிர்ச்சியடைந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மனைவியின் மீது கொண்ட பாசம் காரணமாக, அவர் மரணமடைந்த சில மணி நேரங்களில் கணவரும் உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து, இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தனர். அன்பு மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவத்தால், திருவாவடுதுறை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.