பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் திருடன்: மயிலாடுதுறையில் கைது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பூட்டிய கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பூட்டிய கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் உட்கோட்ட அளவில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணிந்து குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் தலைமறைவானது தெரியவந்தது. இந்நிலையில், நேற்றிரவு மயிலாடுதுறையில் ஒரு கடையின் பூட்டை உடைக்க முயன்ற நபரை அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப் பிடித்து அவரை அடையாளம் கண்டறிந்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து மகன் லட்சுமணன்(42) என்பதும், அவர் கடந்த மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற கடை உடைப்புச் சம்பவம், கடந்த வருடம் நடைபெற்ற மற்றொரு கடை உடைப்புச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், அவர் பொள்ளாச்சி, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, லட்சுமணனைக் கைது செய்த மயிலாடுதுறை போலீசார் அவரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய வாகனம், ஆயுதங்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.