அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்.;
மயிலாடுதுறை ஒன்றியம் செருதியூர் ஊராட்சி முளப்பாக்கம் கிராமம் ஐயனார் கோயில் களத்தில் கடந்த 7 ஆண்டுகளாக திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால் நிகழாண்டு குறுவை பருவத்துக்கு கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி அளிக்கவில்லை.
இதனால், அப்பகுதி விவசாயிகள் இணைந்து அந்த களத்தில் 3 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைத்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து ஒரு மாதமாக கொள்முதல் நிலையத்தில் காத்து வருகின்றனர். உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்தே சென்றனர். போராட்டத்தின் போது அவசர சிகிச்சைக்கு சென்ற ஆம்புலன்ஸ்க்கும் காரில் சென்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கும் வழிவிட்டு தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு சாலை ஓரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன் மற்றும் நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.