மயிலாடுதுறை அருகே பரசலூர் மேல கட்டளையில் அமைந்துள்ள செல்லப்பார் ஐயனார் ஆலய திருப்பணி பாலஸ்தாபன விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் ஊராட்சி, மேலகட்டளை கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லப்பார் அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டது. சாஸ்தாவின் ரூபங்களில் ஒருவரான குமாரசாஸ்தாவாக வீற்றிருந்து, செல்லப்பார் என்ற திருநாமத்துடன் உத்குடிகாசனத்தில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார். செம்பனார்கோவில் சொர்ணபூரிஸ்வரர், பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய சுவாமிகளின் எல்லை காவல் தெய்வமாக விளங்குகிறார். தர்ம ரட்சகர் என்றும் அதர்மத்தை அழிக்கக்கூடியவராக உள்ள செல்லப்பார் ஆலயத்திற்கு விஜயம் செய்த மறைந்த காஞ்சி மாமுனிவர் ஸ்ரீஸ்ரீ சந்திர சேகர பரமாச்சாரிய சுவாமிகள் வழிபட்டு குமார சாஸ்தா என்று அழைத்தார்.
செம்பனார்கோவில் பரசலூர் பகுதியை சேர்ந்த பல்வேறு குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கி வரும் செல்லப்பார் அய்யனார் ஆலயத்தின் திருப்பணி, பாலஸ்தாபன விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய யாகசாலையில், இரண்டாம் கால யாகசாலை பூஜை இன்று நடைபெற்றது. சிறப்பு நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாகுதிக்குப்பின், புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, செல்லப்பார் சுவாமிகள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனை செய்யப்பட்டு, அதன்பின்னர் ஆலயம் பாலஸ்தாபனம் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.