தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-30 15:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

2020-2021-ம் ஆண்டுக்கு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், கூட்டுறவு வங்கிகள் கடன் அளிக்க விதிக்கும் நிபந்தனைகளை திரும்பப் பெறக் கோரியும் மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராபி பருவத்துக்கென சிட்டா, அடங்கல் வழங்கி காப்பீடு செய்வதையும், கடன் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் வேளாண் அலுவலர்களை பணி இடமாற்றம் செய்து வெளிப்படையான நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்புக்கான சட்ட மசோதா மூலம் குத்தகை விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வந்து சேர்ந்தாலும் பாசனத்திற்கு பாய்ச்ச முடியவில்லை என்றும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே விவசாயிகள் பயன்பெற முடியும் என்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News