விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை: தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து கோவில்கள் முன்பு இறைவனிடம் முறையிட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவில் முன்பு கொரானாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்தும் தடையை நீக்க வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மதுபானக்கடை, சினிமா தியேட்டர், பேருந்துகள், அரசு விழாக்கள் பள்ளி கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கும் தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்துக்கும் கோயில்களில் விநாயகரை வைத்து வழிபடுவதற்கும் அனுமதி வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி பதாகைகள் ஏந்தி, இறைவனிடம் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதேபோல், அடியாமங்கலம், அய்யாரப்பர் மேலவீதி, நல்லத்துக்குடி, ஐவநல்லூர், மன்னம்பந்தல் உள்ளிட்ட மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு போடப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.