மழையால் கொழையூரில் 500 ஏக்கர் பயிர் சேதம்: வாய்க்கால் தூர்வாரப்படுமா
மழையால் கொழையூரில் 500 ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கொழையூர் கிராமத்தில் மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் தண்ணீர் அதிக அளவு சேர்ந்துள்ளது. குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொழையூர் கிராமத்தில் பல்லவன் வாய்க்கால், அண்ணாமலை வாய்க்கால் ஆகியன, சரிவர தூர்வாரப்படவில்லை.
இதன் காரணமாக கொழையூர், பூவாலை, செங்குடி ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மழைநீர், பல்லவன் வாய்க்கால் மற்றும் அண்ணாமலை வாய்க்கால் ஆகியவற்றின் வழியே வடிந்து வீர சோழன் ஆற்றில் சென்று கலக்கும். வாய்க்கால்களை தூர்வாரத காரணத்தால் வெள்ள நீர் வடியாமல் சுமார் 500 ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் அழிந்துவிட்டன.
எனவே, ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வெள்ள நீர் வடிவதற்கு வசதியாக, விரைவாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும், மீண்டும் சம்பா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.