செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிய உச்சம் தொட்ட பருத்தி விலை
ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,603-க்கும், சராசரியாக ரூ.7,750-க்கும் விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலமுறையில் வாரந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.
மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5825 விலை நிர்ணயம் செய்துள்ளது. செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் பருத்தியை மத்திய அரசின் அதிகபட்ச ஆதாரவிலையைவிட கூடுதல் விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
திங்கட்கிழமையான இன்று நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், 500 விவசாயிகள் 1,100 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூர், விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 8,603 ரூபாய்க்கும் சராசரியாக 7,750 ருபாய்க்கும் கொள்முதல் செய்தனர். பருத்தியை வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.