மழை நீரால் சூழப்பட்டது மயிலாடுதுறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை கூறைநாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீரால் சூழப்பட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு கர்ப்பிணிபெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திகொள்வதற்கு என்று சிகிச்சைக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆரம்பசுகாதார நிலைய வளாகத்தின் நுழைவு பகுதி சாலையை விட தாழ்வாக உள்ளது. அதனை மேடாக்கி காங்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது. நோயாளிகள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இந்த சுகாதாரநிலையத்திற்கு வெளிபுறத்தில் உள்ள மழைநீர் வடிகால் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் தூர்ந்துபோயும், ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் லேசான மழைபெய்தாலே ஆரம்பசுகாதார நிலையத்திற்குள் நடந்துகூட செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் குளம்போன்று தேங்கி நிற்கிறது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இன்று பெய்த அரைமணிநேர மழையில் நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மழைநீர் வடிய வழியின்றி குளம்போல் தேங்கியது. இதனால் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அண்மையில் நகரில் உள்ள மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவதாக கூறி பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்காத அளவிற்கு காங்கிரீட் தரைகள் அமைக்கப்பட்டிருந்ததைகூட ஆக்கிரமிப்பு என்று கூறி நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
ஆனால் கூறைநாடு நகர ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆண்டுதோறும் மழைகாலங்களில் தண்ணீர் சூழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கான வடிகாலை தூர்வாரவுமில்லை அதில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தற்போது நகரில் உள்ள 36 வார்டுகளிலும் மெகா தூய்மைபணி என்ற பெயரில் மழைநீர் வடிகால், குப்பைகள், பாதாளசாக்கடை கழிவுநீர் பிரச்சினைகளை சரிசெய்துவரும் நகராட்சி துறையினர் உடனடியாக நகர ஆரம்பசுகாதார நிலைய பகுதியில் மழைநீர் தேங்காமல் அப்பகுதியில் உள்ள வடிகால்களை முறையாக தூர்வாரித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.