மயிலாடுதுறையில் விதியை மீறி வியாபாரம் 4 கடைகளுக்கு அபராதம்
மயிலாடுதுறையில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு 10மணிமுதல் அதிகாலை 4மணிவரை ஊரடங்கும் ஞாயிற்றுகிழமைகள் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில்
நேற்று முதல் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மதியம் 12மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளான இன்று மயிலாடுதுறையில் நகராட்சி துறை சுகாதார அதிகாரிகள் பிச்சைமுத்து, ராமையன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
12மணிக்கு கடைகள் மூடப்பட்ட நிலையில் முதலியார் தெரு , பட்டமங்கல தெரு, கிட்டப்பா அங்காடி பகுதிகளில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் 12 மணிக்கு மேல் கடை ஷட்டரை இறக்கி வைத்துக்கொண்டு வியாபாரம் செய்த 4 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். அரசின் கொரோனா வைரஸ் முன்னேச்சரிக்கை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.