கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், நூதன முறையில் வசூல்: குமுறும் குடியிருப்புவாசிகள்
மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நூதன முறையில் வசூல் என குமுறும் குடியிருப்பு வாசிகள். வசூலுக்கு துணை போகிறார்களா அதிகாரிகள்?
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது . இந்த பகுதியில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு செய்வதற்காக வார்டு வாரியாக சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
மாநகர் பகுதியில் இருக்கும் கழிவுநீர்களை சுத்திகரிப்பு செய்ய வெள்ளக்கல் மற்றும் சக்கிமங்கலம் பகுதியில் இருக்கக்கூடிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்காக சிறிய அளவில் கழிவு நீர் உந்து நிலையங்கள் வார்டு வாரியாக செயல்பட்டு வருகிறது.
மேலும், விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் என்பது தற்போது அம்ருத் திட்டத்தின் கீழ் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2025 க்குள் முடிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பாதாள சாக்கடை நீரை வெளியேற்றவும் தனியார் ஒப்பந்தம் மூலம் வைகை மற்றும் சிகரம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அந்த வாகனங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் கழிவுநீர்களை அவனியாபுரம் பகுதியில் இருக்கக்கூடிய வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு வாகன உரிமையாளர்கள் மற்றும் மாநகராட்சியின் ஒப்பந்தம் பெற்ற வாகனங்கள் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு செல்லாமல் நேரத்தையும் போக்குவரத்து நெரிசலையும் டீசலையும் தவிர்க்கும் வகையில், மதுரை மாநகரில் மையப்பகுதியாக இருக்கக்கூடிய முனிச்சாலை பகுதியில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (பம்பிங் ஸ்டேஷனில்) கழிவு நீர்களை இறக்கிவிட்டு வருகின்றனர்.
இதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த பிரபல கட்சி பிரமுகர் துணையுடன் ஒரு தனி ஊழியர் நியமனம் செய்யப்பட்டு அங்கு வரக்கூடிய வாகனங்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருவதாகவும், நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 லாரிகள் இந்த பகுதியில் கழிவு நீர்களை இறக்கிவிட்டு செல்வதால், இங்கிருந்து பம்பிங் செய்து வெள்ளக்கல் மற்றும் சக்கிமங்கலம் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பகுதியில் அதிக அளவு கனரக வாகனங்கள் வருவதாலும், மேலும் இந்த பகுதியில் வேறு பகுதியிலிருந்து கழிவுநீர்களை இந்த பகுதிக்கு கொண்டு வருவதன் மூலமாகவும் அடிக்கடி இந்த கழிவு நீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது ஏற்படுவதாகவும், மேலும், உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக வேறு பகுதியில் இருந்து கழிவுநீர்களை இந்த பகுதிகளில் இறக்கும் பணியில் மேற்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் மீதும் உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.