உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் நலத்திட்ட தொடக்க விழா
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில், பல்வேறு நலத்திட்டங்களை, மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், துவக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி, மதுரை மாவட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டப்பணிகளை அறிவித்தார்கள். அவற்றை செயல்படுத்தும் வகையில், இன்று பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
பாகதேவன்பட்டி கிராமத்தில் ரூபாய் 10.93 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, பாப்பாபட்டி கிராமத்தில் ரூபாய் 14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டிடம் கட்டும் பணி, பாப்பாபட்டி மகாதேவன்பட்டி பேயம்பட்டி மற்றும் கரையாம்பட்டி கிராமங்களில் உள்ள மயானங்களில் ரூபாய் 48.00 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல், கரையாம்பட்டி கிராமத்தில் ரூபாய் 06.00 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, ரூபாய் 01.85 இலட்சம் மதிப்பீட்டில் கல்லுப்பட்டி காலனியில் புதிய தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தும் பணி மற்றும் பாகதேவன்பட்டி பேயம்பட்டி கிராமங்களில் கூடுதல் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தும் பணி மற்றும் ரூபாய் 25.06 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாட்டி கிராமத்தில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, பாப்பாபட்டி மற்றும் கல்லுப்பட்டி காலனியில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி, முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவில் துவக்கப்பட உள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாப்பாபட்டி கிராம பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) பனோத் முருகேந்தர்லால், ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) எஸ்.அபிதா ஹனீப் , ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை மற்றும் பாப்பாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.