உசிலம்பட்டி அருகே கனமழையால் 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே கனமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
கனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை:
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே, கோவிலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முண்டுவேலம்பட்டி கரிசல்பட்டி ஆகிய கிராமத்தில் நேற்றுபெய்த கனமழைக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திருமங்கலம் பிரதான கால்வாயில் வழியாக வரும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால், நெல் வயல்களில் தேங்கி நெற் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது. அதனால், உடனடியாக திருமங்கலம் பிரதான கால்வாயில் வரும் தண்ணீரை நிறுத்தி நெல் பயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது பற்றி அங்குள்ள விவசாயிகள் கூறும்போது:
நேற்று பெய்த கனமழைக்கு எங்கள் பகுதியில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டது. இது குறித்து, தகவல் தெரிவிக்க இன்று காலையிலிருந்து அதிகாரிகள பலமுறை தொடர்பு கொண்டும் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் சேதமடைந்த நெல் பயிர்களை பார்க்க வரவில்லை. இதனால், எங்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஐந்துக்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தோம். மேலும், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் கனமழைக்கு சாய்ந்து பயிர்கள் அழுகும் நிலைக்கு உள்ளதால், உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வட்டிக்கு பணம் வாங்கி வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்தும், செலவு செய்துள்ள எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, யூரியா மற்றும் உரத்தட்டுப்பாடு இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு இந்த நெல் பயிர்களை உருவாக்கி வைத்திருந்தோம். அறுவடைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் நெல் பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி இருப்பதால், எங்களுக்கு மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மழை பெய்தால் நெல் பயிர்கள் அனைத்தும் அழுகி விடும் ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினர்.