டூ வீலர் பெண்களிடம் வழிப்பறி செய்த ஆசாமி: குறிவைத்து பிடித்த போலீஸ்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் நகைகளை வழிப்பறி அடிக்கடி நடப்பதாக புகார்கள் வந்தன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
குற்றச்சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா உதவியால் நடந்த விசாரணையில், உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் நாட்டாபட்டியை சேர்ந்த நாககுமார் மகன் ராஜ்குமார் வயது 27 என்பவர் என்று தெரிய வந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 13. 1/2 சவரன் நகை பறிமுதல் செய்தனர். மேலும், தொடர் கொள்ளைகளை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.