மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அமைச்சர்கள் ஆய்வு
மதுரையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது;
மதுரையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முதல்வரின் முகவரித் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிய திட்டங்கள், வருவாய்த்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆவின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் ”முதல்வரின் முகவரி” என்ற தனித்துறை தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 107179 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில், 74805 மனுக்கள் ஏற்கப்பட்டும், 30602 மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், 1772 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின்கீழ் மக்கள் தரும் மனுக்களுக்கு மதிப்பளித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 949 பள்ளிகளில் 52298 மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கு பசியாற உணவளித்து அவர்களின் கல்வியை ஊக்குவிப்பதும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
மதுரை மாவட்டம், வீரபாண்டி பகுதியிலுள்ள பள்ளியில் இன்றைய தினம் சிறப்பு திட்ட செயலாக்க குழு ஆய்வு செய்தபோது காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவில் (சாம்பார்) 5 வகையான காய்கறிக்குப் பதிலாக ஒரே ஒரு காய்கறி மட்டும் இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரிடம் விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித்தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சுயதொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 11767, நகரப் பகுதியில் 5605 சுயஉதவிக் குழுக்கள் என மொத்தம் 17372 சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 2023 – 2024-ஆம் நிதியாண்டிற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 980 கோடி கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூபாய் 466.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள், இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பசுமை மற்றும் தூய்மை கிராமங்கள் உருவாக்குதல், பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் , நீர்நிலைகள் புனரமைத்தல், வாழ்வாதார மற்றும் சந்தைப்படுத்துதலை ஊக்குவித்தல், சமத்துவ மயானங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டில் 579 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 500 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2023-2024-ஆம் ஆண்டில் 589 பணிகள் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 42 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விவசாயிகளை ஊக்கப்படுத்திட வேண்டும். வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் வழங்கப்படும் வேளாண் கருவிகள், குறைந்த வாடகையில் வேளாண் பணிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் வாடகை மையங்கள் ஆகியவற்றின் பலன்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் அண்ணா நகர், சொக்கிக்குளம், பழங்காநத்தம், ஆணையூர், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி என 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை தொடர்ந்து கண்காணித்து தேவைக்கேற்ப மராமத்துப் பணிகளை மேற்கொண்டு முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ வசதி வழங்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மகப்பேரின் போது தாய்-சேய் உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் மருத்துவர்கள் பணியாற்றிட வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார்கள் நலனுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதோடு, கர்ப்பிணித் தாய்மார்களின் நலனை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் பாலின விகிதம் ஊரகப் பகுதியில் 933-ம், நகரப் பகுதியில் 954-ம் உள்ளது. இதனை மேலும் மேம்படுத்திட வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் , குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி பள்ளிக்கல்வித் துறையின் மூலம் நான் முதல்வன் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குடும்ப சூழ்நிலை, ஆதரவற்ற நிலை போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ந்து கல்வி கற்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்திட வேண்டும்.
கல்வி இடைநிற்றல் என்ற நிலையே இல்லாத வகையில் ஆசிரியர் பணியாற்றிட வேண்டும். பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வி சேரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து ஆய்வு செய்து இடைவெளி இல்லாத நிலையை எய்திட வேண்டும். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்திடும் நோக்கில், தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது 4192 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். நடப்பாண்டிற்கு விண்ணப்பம் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, குடிநீர் விநியோகம், சாலை திட்டப் பணிகள், ஊரகப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு போன்ற பணிகளில் எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்தப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளான பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் ஆணை ஆகியவற்றை காலதாமதமின்றி வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், மதுரை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய வளர்ச்சி திட்டப் பணிகளை அறிவித்துள்ளார்கள். குறிப்பாக, மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் நிறுவனம் இணைந்து முன்னோடி டைடல் பூங்கா அமைத்தல் , அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைத்தல், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு முகமை திட்டத்தின் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், 400 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையம் அமைத்தல்,
மதுரை சிறைச்சாலையை இடமாற்றம் செய்தல், கோரிப்பாளையம் மேம்பாலம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. பணிகளை விரைந்து நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) ,
ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி டாக்டர்.மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், துணை மேயர் தி.நாகராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.