மதுரை நகரில் நீர் நிலைகள் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம் : மாநகராட்சி ஆணையர்
மதுரை மாநகராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால் கள் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.;
மதுரை மாநகராட்சியின் சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் மூலம் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், ஊரணிகள், ஆறுகள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகள் தேவையற்ற குப்பைகள், மண்துகள்கள், வளர்ந்துள்ள செடி, கொடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களை 5.7.2023 முதல் 7.7.2023 வரை மூன்று நாட்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மண்டலம் 1க்கு உட்பட்ட கோசாக்குளம் வாய்க்காலில் 245 மீட்டர் தூரத்திற்கும், மண்டலம் 2 க்கு உட்பட்ட தண்டலை வாய்க்காலில் 223 மீட்டர் தூரத்திற்கும், மண்டலம் 3க்கு உட்பட்ட சிந்தாமணி வாய்க்கால் மற்றும் கிருதுமால் வாய்க்காலில் 420 மீட்டர் தூரத்திற்கும், மண்டலம் 4 க்கு உட்பட்ட பனையூர் வாய்க்காலில் 260 மீட்டர் தூரத்திற்கும் , மண்டலம் 5க்கு உட்பட்ட மாடக்குளம் முத்துப்பட்டி வாய்க்கால் மற்றும் சேர்மத்தான் வாய்க்காலில் 580 மீட்டர் தூரத்திற்கும் என, மொத்தம் 1728 மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால்களில் மழைநீர் சீராக செல்வதற்கு தேங்கியுள்ள மண் படிவங்கள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவற்றை தூர்வாரி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வைகை ஆற்றுப் பகுதிகளில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், ஊருணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகள், மணல்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் மாநகராட்சியின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.