மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்: மதுரை துணை மேயர்
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என மதுரை துணை மேயர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன. மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
முன்னதாக, திமுக தலைமை மதுரை மாநகராட்சியின் துணை மேயர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, மார்க்சிஸ்ட் கட்சியின் துணை மேயர் வேட்பாளராக 80-ஆவது வார்டில் வெற்றிபெற்ற நாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, துணை பேர் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார். நாகராஜன் வெற்றி பெற்ற பின்னர் துணை மேயர் பதவி ஏற்பு நடந்தது.
இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மேயர் இந்திராணி, பொன்வசந்தம், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளபதி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சு. வெங்கடேசன், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில், தன்னுடைய கல்லூரி காலம் முதலே பங்கேற்று வந்தவர் நாகராஜன். முப்பதாண்டுகளாக கட்சிப் பணியில் பல்வேறு பொறுப்புகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுவருகிறார். இவரை மதுரை மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளராக அறிவிப்பதில் கட்சி பெருமையடைகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து, துணை மேயர் வேட்பாளர் நாகராஜன் கூறுகையில், மதுரை மாநகர வளர்ச்சி குழுவில் இடம்பெற்றுள்ளதால் இங்குள்ள மக்கள் தேவைகள் என்ன என்பதை நன்கு அறிவேன். அதனடிப்படையில், துணை மேயர் பொறுப்பில் தேவையான வளர்ச்சி பணிகளில் முழு அக்கறை காட்டுவதோடு, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனத் தெரிவித்தார்.