ரூ.4கோடி மதிப்பு இடத்தை பள்ளிக்கு வழங்கிய பெண்: கிராம மக்கள் பாராட்டு..!
இன்றைக்கு விற்பனை செய்தால் ரூ.4 கோடி பெறுமானமுள்ள இடத்தை தானமாக பள்ளிக்கூடத்திற்கு வழங்கிய பெண்ணை ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ரூ 4 கோடி மதிப்புமிக்க இடத்தினை மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்
மதுரை:
மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிர பாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம் தனக்கு, சொந்தமான நிலத்தை- 1ஏக்கர் 52 சென்ட் இடம்- சுமார் ரூ4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை தனது மகள் "ஜனனி" நினைவாக அரசுக்கு தானமாக பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளதனை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் இடத்திற்கான பத்திரத்தை ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார், மற்றும் தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் உடனிருந்தனர். பள்ளிக்கு, இடத்தை தானமாக வழங்கிய பெண்ணுக்கு, கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கூடுதல் தகவல்
தானங்களில் சிறந்தது அன்னதானம். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் என்பது மத நம்பிக்கை. அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம். அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.
தானங்களும் அதன் பலன்களும்:
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
ஆனால் இதில் உள்ள அனைத்து பலன்களும் கிடைக்கும் ஒரு தானம் கல்விக்கு தானம் செய்வது. அது பொருளாகவோ அல்லது பணமாகவோ இருக்கலாம். ஆனால் அது கல்விக்கு போய்ச்சேரும் என்றால் மேற்கண்ட அத்தனை புண்ணியங்களும் உண்டாகும்.
பள்ளிக்கூடத்திற்கு இடத்தை எழுதிக்கொடுத்த பூரணம் அம்மாவுக்கும் இந்த எல்லா புண்ணியங்களும் கிடைக்கட்டும் என்று பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் வாயிலாக கூறுகிறோம்.