சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய மூன்று மாத கம்ப கொடியேற்றம்

சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும்

Update: 2023-03-28 06:45 GMT

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோயிலில்  நடைபெற்ற  மூன்று மாத கொடியேற்ற விழாவில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும். இதனை ஒட்டி மூன்று மாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மே 17-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22 -ஆம் தேதி திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30 -ஆம் தேதி பால்குடம், அக்னிசட்டி நிகழ்ச்சியும், மே 31 -ஆம் தேதி பூக்குழி நிகழ்ச்சியும், ஜூன் 6 -ஆம் தேதி தேரோட்டமும், ஜூன் 7 -ஆம் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார்-செயல் அலுவலர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி, சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.விழாவை கான, தென்கரை, முள்ளிப் பள்ளம், திருவேடகம், ஊத்துக்குளி, கச்சிராயிருப்பு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

கோயிலின் சிறப்புகள்...

இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1000-2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஆலயம்.பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம்.

எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.

அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.

மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான். பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது. ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு. அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோயில் கொண்டிருக்கிறாள்  ஜெனகை மாரியம்மன்.

இந்த மாரியை, ஜனகமகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவள், ‘ஜனகை மாரி’ எனப்பட்டு, ‘ஜெனகை மாரி’ என்ற பெயர் மாற்றம் பெற்றாள்.அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள், ரேணுகாதேவி. இவளை, ‘சந்தனமாரி’ என்கின்றனர். இக்கோயிலில், வைகாசி திருவிழா 17 நாட்கள் நடக்கும். மாரியின் மகத்துவமான அருளைப் பெற சோழவந்தான் சென்று வரலாம்.

Tags:    

Similar News