மதுரை மாவட்டம் திருவேடகம் அருகே வைகை நதியில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்
திருவேடகம் சாய்பாபா கோவில் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம், தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் இன்று கரையை கடக்கும் சூழ்நிலையில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் மதுரை சிவகங்கை சோழவந்தான் அணைப்பட்டி போன்ற பகுதிகளில் இரு கரைகளைத் தொட்டு அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது . மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருந்தாலும், ஆர்வம் காரணமாக இளைஞர்களும் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் ஆபத்தை உணராமல், குளித்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சோழவந்தான் அருகே, திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் அதிகமான அளவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து வந்த நிலையில், மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற 21. வயது இளைஞர் குளிக்கும்போது நீரீல் மூழ்கி மாயமானார்.
தகவல் அறிந்த, சோழவந்தான் தீயணைப்பு படை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேற்று மாலையிலிருந்து மாயமான இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடியும் இளைஞர் பற்றிய தகவல் கிடைக்காததால், இன்று அதிகாலை முதல் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அதிகாரி தௌலத் பாதுஷா, வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கௌதமன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் இளைஞரின் உடலை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் தீயணைப்பு துறையினர் சுமார் 21 பேர் இன்று அதிகாலை முதல் இளைஞரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் காணாமல் போன இளைஞரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் காவல்துறையுடன் இணைந்து உதவி செய்து வருகின்றனர் தற்போது வரை இளைஞர்களின் உடல் கிடைக்காததால், உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இளைஞர் கார்த்திக் உடன் ஆறு பேர் வந்ததாகவும் அதில் ஐந்து பேர் கரையில் உள்ளதாகவும் கார்த்திக் மட்டும் நீரில் மூழ்கி மாயமானதால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
கடந்த காலங்களில், வைகை ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது, திருவேடகம் சாய் பாபா கோயில் அருகே சோழவந்தான் காவல்துறையினரும், மேலக்கால் காவல்துறையினரும் கொடிமங்கலம், துவரிமான் வைகை ஆற்றங்கரையோரமாக நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு, வைகை நதியில் குளிக்க வருவோரை, திருப்பி அனுப்புவது வழக்கமாம்.
ஆனால், இந்த முறை வைகையில் தண்ணீர் வரும்போது, வருவாய்த்துறை எச்சரிக்கை பலகை வைக்கவில்லை என, கிராம் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே, மாவட்ட காவல் நிர்வாகம், இனி வரும் காலங்களில், வைகை நதியில் அதிக தண்ணீர் வரும்போது, குளிக்க பொதுமக்களை அனுமதிக்ககூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.