வாடிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை, பணம் திருட்டு
வாடிப்பட்டி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை ரூ.1.10 லட்சம் பணத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது55). மதுரையில் பஞ்சு ஆலையில் பணி செய்து, ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 16ஆம் தேதி, தந்தையின் திதிக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவிற்கு சென்றார்.
அதன் பின்னர், நேற்று மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரி திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த 47 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.10லட்சம் ரொக்க பணம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. அதை யாரோ மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக, கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.